×

மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

 

மதுரை, நவ. 25: மதுரை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அனுமதித்த அளவை விட கூடுதலாக ஆக்கிரமித்திருந்த கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்து அகற்றினர். மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகள், தெருக்கள், பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், வைகை ஆற்றங்கரைப்பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கும் ஆக்கிரமிப்புகள், நகரமைப்பு பிரிவினரால் அகற்றப்பட்டு வருகிறது.

இதன்படி மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தின் நுழைவுவாயில் மற்றும் உட்பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 30 தரைக்கடைகள், பழக்கடைகள் மாநகராட்சி பணியாளர்கள் மூலம் நேற்று அகற்றப்பட்டது. மதுரை மாநகராட்சியின் அனுமதி பெற்ற 189 கடைகள் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக முன் பகுதியில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் மற்றும் கட்டுமானங்கள் பொக்லைன் இயந்திரம் உதவியுடன் நேற்று இடித்து அகற்றப்பட்டன.

எதிர்காலத்தில், இதுபோல் நுழைவு வாயில் மற்றும் உட்பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்வதுடன், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இப்பணிகளை மாநகராட்சி செயற்பொறியாளர்(திட்டம்) மாலதி, உதவிப் பொறியாளர் வரலெட்சுமி, உதவி ஆணையாளர் (வருவாய்) மாரியப்பன், உதவி ஆணையாளர் பொன்மணி ஆகியோர் மேற்பார்வையில், ஆக்கிரமிப்பு அகற்றும் பிரிவின் ஊழியர்கள் போலீசார் பாதுகாப்புடன் மேற்கொண்டனர்.

The post மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்: மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : station ,Madurai ,Cattle Bus Station ,Beef Bus Station ,Dinakaran ,
× RELATED பெண் காவலருடன் தகராறு செய்த 2 வாலிபர்கள் கைது